ஸ்ரீ மஹா பெரியவாள் சிறுவன் ஸ்வாமிநாதனாகத் திண்டிவனத்தில் இருந்து வந்த காலம். அதாவது நிகழ் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகள்.
அந்த ஊரில் ஓர் அந்தணப் பாட்டியம்மை, சீடை முறுக்கு வியாபாரம்.
ஸ்வாமிநாதனுக்குப் பாட்டியம்மையின் சீடை முறுக்கில் ஒரு ருசி. கையில் சில்லறை கிடைக்கும்போது வாங்கிச் சாப்பிட்டு மகிழ்வான்.
தான் மகிழ்வது மட்டுமில்லை, தோழர்களுக்கும் கொடுத்து மகிழ்விப்பான்.
அப்புறம் அந்தத் தோழர்களும் அவர்கள் கையில் சில்லறை கிடைக்கும்போது (எப்படிக் கிடைத்தது என்ற ஆராய்ச்சியில் நாம் இறங்க வேண்டாம்! எல்லாரும் தூய ஸ்வாமிநாதனாக இருப்பார்களா, என்ன?) பாட்டியம்மையின் முறுக்கு இத்யாதி நொறுக்குத் தீனிகளை, வாங்கலாயினர்.
தூய ஸ்வாமிநாதன் ஸாமார்த்தியசாலியுமாவான். நியாயமான ஸாமார்த்தியமாகவே அது கட்டுப்பட்டு நிற்பதற்குத் தூய்மை அழகாக வரம்பிட்டது.
இப்போது அந்த நியாய ஸாமார்த்தியத்தைப் பாட்டியம்மையிடம் காட்டினான் பன்னிரு பிராயமிருக்கக் கூடிய பாலன்.
‘பாட்டி! ஒனக்கு இத்தனை வாடிக்கை பிடிச்சுக் குடுத்திருக்கேனோல்லியோ? அதனால எனக்கு வெலெயக் கொஞ்சம் கொறச்சுக் குடேன்’ என்றான். கமிஷனும் டிஸ்கவுன்டும் எந்த தர்ம நியாய வியாபாரத்திலும் உண்டுதானே?
பாட்டியம்மை மறுத்தாள் -- இன்னுயிரையே கமிஷன் மட்டுமின்றி இலவசமாக ஈய வேண்டிய பிக்ஷாண்டியின் அவதாரமென்று அறியாததால்.
அவதாரனுமே அதை அறியாதது போலத்தானே நூறு கண்டபோதும் வெளிக்காட்டிக் கொண்டது? எனவே பன்னிரு பிராயத்தில் சாமானிய மானவனாகவே மீண்டும் பேரம் பேசினான்.
பாட்டியம்மை அசைந்து கொடுக்கவில்லை.
‘இனிமே ஒங்கிட்ட நான் வாங்கப் போறதேயில்லே’ என்று கோபமாகக் கூறினான் ஸ்வாமிநாதன்.
‘வாங்காட்டா போயேன்! ஏதோ நீ வாங்காட்டா எனக்குப் பொழப்பே இல்லாமப் போயி ஒன்னைப் பூர்ணகும்பம் வெச்சுக் கூப்பிடுவேன்னு நெனச்சுண்டியோ?’ என்று பாட்டி அதைவிடக் கோபமாகக் கேட்டாள்.
‘கூப்பிட்டுத்தான் பாரேன்!’ என்று சொன்னபடி ஸ்வாமிநாதன் நகர்ந்துவிட்டான்.
* * *
ஓரிரு வருஷந்தான் ஓடியிருக்கும்.
காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் விஜயம் செய்கிறார் என்பதில் திண்டிவனம் உத்ஸவ உத்ஸாஹத்தில் பொங்கி எழுந்தது. எந்த ஊருமே ஒரு ஜகத்குருவின் விஜயத்தில் பொங்குமே, அப்படி அல்ல. அதைவிட அனந்தம் மடங்கு ஆனந்தப் பொங்கலில் பொங்கியது.
காரணம், இரண்டு மாதம் முன்பு வரை அந்தத் திண்டிவனத்தின் செல்லப் பிள்ளையாயிருந்த பதின்மூன்று வயது ஸ்வாமிநாதந்தான் இப்போது விஜயம் செய்கிற ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடாதீச்வர ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்! சற்றும் எதிர்பாராத் திருப்பமாகப் பள்ளி மாணவன் புவன ஆசிரியனாகப் பரிணாமம் பெற்று விட்டான்!
வடார்காட்டுக் கலவையில் அதிகக் கோலாஹலமின்றிப் பீடாதிபத்தியம் ஏற்று ஸ்ரீமத் சந்திரசேகரேந்திர ஸரஸ்வதிகளாக ஆன பூர்வாச்ரம ஸ்வாமிநாதர் அப்போதெல்லாம் ஸ்ரீமடத்தின் ராஜதானி என விளங்கிய கும்பகோணத்தில் ஸம்பிரதாய ராஜாங்கத்துடன் விமாரிசையாகப் பட்டாபிஷேகம் கொள்வதற்காகச் செல்கிறார். செல்லும் வழியில்தான் தன்னைத் தரணிக்கு ஈந்த முந்தைய வாஸ ஸ்தலமான திண்டிவனத்திற்கு விஜயம் செய்கிறார்.
வீட்டுக்கு வீடு தங்கள் வீட்டுப் பிள்ளையை வீட்டு நெறிகாட்டும் தண்டபாணி ஸ்வாமியாகக் காணப் போகிறோம் என்ற ஆனந்தம்! அவர்கள் உள்ளத்தில் நிறைந்த அந்த ஆனந்த கும்பத்திற்கு வெளி அடையாளம் போல ஒவ்வோர் இல்லத்திலும் தெய்வக் குழந்தையை வரவேற்கப் பூர்ண கும்பம் தயாராயிருந்தது. (ஸகல ஜாதியாரும், பெண்டிருங்கூட பிராம்மண முகமாக ஜகத்குருவுக்கு இம் மாரியாதை செய்வது வழக்கம்.)
அன்று முறுக்கிக்கொண்ட முறுக்குப் பாட்டியம்மையும் இன்று பூர்ணகும்பம் ஸித்தம் செய்தாள். எப்பேர்ப்பட்ட உணர்ச்சிப் போராட்டத்தோடு? ’பூர்ண கும்பம் கொடுத்து உன்னைக் கூப்பிடுவேனா?’ என்று முகத்திலடிக்காத குறையாக அந்தச் சமர்த்துச் சர்க்கரைக் கட்டியை விரட்டியடித்தப்பின் அது அந்தப் பக்கம் தலை காட்டவேயில்லை. அப்புறம் அது கிட்டவொண்ணா மஹாகுரு பீடம் ஏறியதாகப் பாட்டியம்மை அறிந்தாள். அறிந்த அன்றிலிருந்து அபராதி உணர்வில் நொந்து கொண்டிருந்தாள். அந்த உணர்வின் இறுக்கத்துடனேதான் அப்போது விரட்டியடித்த குழந்தையை இன்று வருந்தி அழைக்கப் பூர்ணகும்பம் தயார் செய்கிறாள். 'குழந்தை குருஸ்வாமி இதை ஏற்குமா, நிராகாரிக்குமா?' என்று பாட்டியமமையின் மனசு சஞ்சலிக்கிறது.’கூப்பிட்டுத்தான் பாரேன்!’ என்றல்லவா அன்றைக்கு எதிர்சவால் விட்டது?
அதோ தெரிந்த குருஸ்வாமி, சிறுகச் சிறுக அதோ இதோ ஆக, வருகிறது, அடுத்த வீட்டு வாசலுக்கும் வந்து விட்டது!
எப்பேற்பட்ட உருமாற்றம்! அதுவும் ஓரிரண்டாண்டுக்குள்ளேயே! அன்று அதிசமர்த்துக் களை என்ற அளவோடு நின்ற தேஜஸ் இன்று தெய்விக காம்பீர்யம் என்பதாக உயர்வு பெற்றிருக்கிறது. அதிலேயே அதிசயமாக இழைகிறது தெய்வத் தாய்மையின் குழைவு!
பாட்டியம்மையின் சார்பில் அடுத்து அவள் வீட்டு வாசலில் பூர்ணகும்பம் அளிக்கப்படுகையில் அந்தத் தேஜஸ் மட்டுமே பிரிந்து தழலாகிச் சுடுமோ?
வந்தேவிட்டது குழந்தை குருஸ்வாமி, வீட்டு வாசலுக்கு எனும்போது,
ஆவலும் அவாவும் பாட்டியம்மையின் கால்களை முன்னே தள்ள, அபராத உணர்வும் அச்சமும் அவற்றைப் பின்னுக்கு இழுக்க,
அவள் எவ்வாறோ சமாளித்துக் கொண்டு முன்வந்து அடங்கி ஒடுங்கி நிற்க,
சாஸ்திரிகள் அவள் சார்பில் பூர்ணகும்பத்தைக் குழந்தை குருநாதன் முன் நீட்டினார். குருபாலரைன் ஒளி நயனம் ஒளிந்து கொள்ளத் தவித்த பாட்டியம்மை மேல் படிந்தது.
ஒளி தழலாகவில்லை. தண் மதியமே ஆயிற்று! தேஜஸ் மாத்திரம் பிரிந்து வராமல் தாய்மை மாத்திரமே பிரிந்து திரண்டு வந்தது!
அந்தத் தாய்மை குழந்தையின் எளிமையோடும், உறவுள்ளத்துடனும் முறுவலாக அரும்பிக் குறும்பு மொழியாக மலர்ந்தது.
கும்பத்தின் மேலிருந்த பூர்ணபலமான தேங்காயைத் தொட்டபடியே, ’குடுப்பேனோ-ன்ன நீயும் குடுத்துட்டே! வாங்கிப்பேனோ-ன்ன நானும் வாங்கிண்டுட்டேன்!’ என்று தேனாகச் சொல்லி, அதைக் கையில் எடுத்துக் கொண்டது அன்புருவாகிவிட்ட அனைத்துயிரின் ஆசார்ய மூர்த்தம்.
அவரவர் சூளுரைப்படி நடக்காமல் தோல்வியுற்றதிலேயே இருவருக்கும் வெற்றிக் களிப்பு!
அந்தக் களிப்பின் ரூபகமாகப் பாட்டியம்மை அதுவரை ஊரார் செய்த அத்தனை நமஸ்காரங்களுக்கும் ஈடான ஒரு நமஸ்காரத்தைச் செய்தாள்.
தவறு, அதை மன்னிப்பது என்ற எண்ணங்கள்கூட எழாத சுத்த ப்ரேமை வடிவாகிவிட்ட குழந்தை குருஸ்வாமி அதுவரை ஊராருக்குச் செய்த அத்தனை ஆசிக்கும் ஈடாகப் பாட்டியம்மையை ஆசீர்வதித்தது, ’நாராயண நாராயண’ என்ற பிரார்த்தனையால்.