சிதறு தேங்காய் என்ற உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான் எனக்கே தெரிந்தது. அப்போது (1941) நான் நாகைப்பட்டினத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்து வந்தேன்.
அங்கே கோயிலில் பிள்ளையாருக்கு நிறையச் சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்குக் குழந்தைகள் ஒரே நெரிசலாகச் சேர்ந்துவிடும். திபுதிபு என்று அவை ஓடி வருவதில் என்மேல் விழுந்துவிடுப்
போகின்றனவே என்று என்கூட வந்தவர்களுக்குப் பயம். அவர்கள் குழந்தைகளிடம் இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப் போங்கள் என்று கண்டித்தார்கள்.
அப்போது ஒரு பையன் டாண் என்று, பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு, அப்புறம் எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன பாத்தியதை இருக்கிறது? சிதறுகாய் போட்டால் அது எங்கள் பாத்தியதைதான். அதை எடுத்துக் கொள்ள நாங்கள் வரத்தான் செய்வோம் என்றான். அவன் பேசிய ஜோர், அதிலிருந்த உறுதியைப் பார்த்தபோதுதான் எனக்கே, வாஸ்தவம்தான், குழந்தை ஸ்வாமியின் பிரஸாதத்தில் குழந்தைகளுக்குத்தான் முழு பாத்தியதையும் என்று தெரிந்தது.