வேறு சில விஷயங்களிலும் அவர்கள் நம்மைவிட
வைதிகம். எனக்கே ஆசாரம் சொல்லிக் கொடுக்கிற
வடக்கத்திக்காரர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்.
ஸமீபத்தில் (*) நடந்த ஒன்று சொல்கிறேன்.
கோரக்பூரில்
கல்யாண கல்பதரு பத்திரிகை நடத்துகிறார்கள். அந்த
கீதா ப்ரெஸ்காரர்கள் பக்த கோஷ்டியோடு தக்ஷிணத்துக்கு
யாத்ரை வந்திருந்தார்கள். நானூறு, ஐநூறுபேர் இருக்கும்.
காஞ்சீபுரத்துக்கும் வந்தார்கள். அன்றைக்கு எனக்கு
மௌன தினம். மா மரத்தடியில் உட்கார்ந்து
கொண்டிருந்தேன். தர்சனத்துக்கு வந்தார்கள்.
பிரஸாதமாகக் கல்கண்டு தந்தேன். அப்போது பல பேர்
என்னவோ தயங்கி தயங்கி வாங்கிக்கொள்கிற மாதிரி
இருந்தது.
நான் பாட்டுக்குக் கொடுத்துக்கொண்டே
போனேன். ஒரு பெண் மட்டும் இப்படித் தயக்கதோடு
வாங்கிக் கொள்வது என்றில்லாமல், அதை வாங்கிக்
கொள்ளவே இல்லை. பளிச்சென்று, யஹ் காம் மேம் நஹி
ஆதா; கோயி தூஸ்ரா ப்ரஸாத் தீஜியே என்று
சொல்லிவிட்டாள். அதாவது, இது ஒரு காரியத்துக்கும்
பிரயோஜனப்படாது; வேறே ஏதாவது பிரஸாதம்
தாருங்கள் என்றாள். உடனே எனக்கு மற்றவர்கள் ஏன்
தயங்கினார்கள் என்று காரணம் புரிந்துவிட்டது.
முன்னெல்லாம் சர்க்கரை ஆலைகளில் கரும்பைச்
சுத்தமாக்கிக் கல்கண்டு பண்ணுவதற்கு மாட்டு
எலும்புகளை உபயோகப்படுத்தி வந்தார்கள். அதனால்
அது ஸ்வாமி நைவேத்யமாகவும் பிரஸாதமாகவும்
இருப்பதற்கில்லை என்று வடக்கே வைத்திருக்கிறார்கள்.
[1934-36ல்] நான் வடக்கே யாத்ரை பண்ணினபோது
இதைத் தெரிந்து கொண்டு சேர்க்கக் கூடாது என்று
வைத்திருந்தேன். அப்புறம் கொஞ்சம் வருஷத்துக்குப்
பிற்பாடு ஆலைக்காரர்கள் சிலர் இப்போதெல்லாம்
எலும்பை உபயோகபடுத்தாமலே வேறு தினுஸில்
ப்ராஸெஸ் பண்ணுவதாகத் தெரிவித்தார்கள். அதிலிருந்து
மறுபடி கல்கண்டு சேர்ப்பது என்று ஆரம்பித்தேன்.
ஃபாக்டரிகளின் பழைய முறையை நினைத்துத்தான்
இப்போதும் இந்த வடக்கத்தி கோஷ்டி கல்கண்டை
அக்ஸெப்ட் பண்ணிக்கொள்ள முடியவில்லை; ஆனாலும்
ரெஃப்யூஸ் பண்ணினால் ஸ்வாமிஜிக்கு மரியாதைக்
குறைச்சலாச்சே என்று ரிலக்டன்ட்டாக வாங்கிக்
கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெண்ணானால்
ஆசார்யனைவிட ஆசாரந்தான் முக்கியம் என்று
(ஆசார்யர்கள் ஒருத்தர் போய் இன்னொருத்தர் என்று
வந்து கொண்டேயிருக்கிறார்கள்; ஆசாரம்தானே
என்றைக்கும் சாச்வதமாக, இத்தனை ஆசார்யர்களுக்கும்
basic-ஆக இருக்கிறது என்று) தைரியமாக: இது
வேண்டாம்; வேறே கொடுங்கோ என்று சொல்லி
விட்டாளென்று புரிந்து கொண்டேன்.
மௌனமானதால்
அப்போது ஒன்றும் எக்ஸ்ப்ளெயின் பண்ணவில்லை.
நம்மைவிடச் சிலதில் வடதேசக்காரர்கள்
சாஸ்திரோக்தமாயிருக்கிறார்களென்பதற்காகச்
சொன்னேன்.
* 1956-ல் நடந்ததாக இருக்கலாம்