நாம் நம்மைவிட அநாசாரக்காரர்கள் என்று நினைக்கும் வடக்கத்திக்காரர்கள்தான் அநேக விஷயங்களில் நம்மைவிட நல்ல சாஸ்திர வழக்குகளை அநுஸரிப்பவர்களாயிருக்கிறார்கள். ‘ஸ்வதந்திரம்’ வந்த பிற்பாடு அங்கேயும் ரொம்ப க்ஷீண தசை என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் ஸமீப காலம் வரையில் நான் தெரிந்து கொண்டதில் அவர்களிடம் பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஆஹார விஷயம் அதில் ஒன்று. இத்தனை புளி, மிளகாய், பெருங்காயம் என்று நாம் வைத்துக் கொண்டிருப்பது போல அங்கேயில்லை. இதெல்லாம் ராஜஸத்தில் சேர்ப்பதுதான்.
இதில் பெங்காலை குறிப்பாகச் சொல்ல வேண்டும். “மத்ஸய்ப் பிராம்மணாள்” உள்ள ஊராச்சே என்றால் அது [மத்ஸ்யம் உண்ணும் பழக்கம்] முன்னேயே சொன்னாற்போல் ஒரு நிர்ப்பந்தத்தில் ஏற்பட்டது.
நாங்கள் பெங்கால் போயிருந்தபோது அவர்கள் ஆஹார வசதிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது பெரிய முகாமாக மடத்து ஜனங்கள் போயிருந்தோம். அவர்களும் சளைக்காமல் நாநூறு ஐநூறு பேர் சமைத்துச் சாப்பிடுவதற்கு வேண்டிய சாமான்கள் கொண்டு வந்து வைத்திருந்தார்கள். ஆனால் அதில் புளி இல்லை. புளி இல்லாமல் நமக்கு ஏது சாப்பாடு? குழம்பு, ரஸம் எதுவானாலும் அதுதானே முக்யம்? அவர்களுக்கோ கோதுமையும், டாலுக்குப் பருப்பும் இருந்தால் போதும், பெங்காலின் அரிசிச் சாதம் சாப்பிடுபவர்கள் தானென்றாலும் ரஸம், குழம்பு போட்டுக் கொள்ளாதவர்கள். அதனால் அவர்களுக்குப் புளியே தேவையில்லை.
நாங்கள் புளி வேண்டுமென்று கேட்டோம். உடனே எங்கேயோ நாலைந்து மைல் போய் அங்கேயிருந்த புளிய மரத்திலிருந்து கொஞ்சம் பச்சைக் காயைப் பறித்துக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அவர்கள் கொண்டு வந்த ஸ்வல்பப் புளியங்காய் இங்கே மடத்திலே வைக்கிற அண்டா சாம்பாருக்கு ஸமுத்திரத்தில் பெருங்காயம் கரைக்கிற மாதிரிதான் ஆகியிருக்கும்.
“இத்தனூண்டை வைத்துக்கொண்டு என்ன பண்ணுவது? இன்னும் ரொம்ப வேணுமே!” என்றோம்.
உடனே அவர்கள் பரிஹாஸமாக, “க்யா ஆப் இம்லீ காதே ஹை, யா சாவல் காதே ஹை?” (நீங்கள் புளியைச் சாப்பிடுகிறீர்களா, அல்லது அரிசி சாப்பிடுகிறீர்களா?) என்று கேட்டார்கள்!
பெங்கால் மாதிரி மத்ஸ்ய ஸம்பந்தங்கூட இல்லாமல் ராஜஸ்தானம், குஜராத், ஸெளராஷ்ட்ர, கட்ச் மத்யப் பிரதேஷ் ஆகிய ராஜ்யங்களில் எல்லா ஜாதியாரிலுமே மரக்கறி உணவுக்காரர்கள் ஏராளமாயிருக்கிறார்கள்.